ஜெயலலிதாவின் ஆசியுடன் பாஜகவில் இணைந்துள்ளேன்

நடிகர் ராதாரவி, நடிகை நமிதா ஆகிய இருவரும் தேசிய செயல் தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அதிமுக சார்பில் 2001 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராதாரவி.

 

அதன்பின் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

 

அதனை எடுத்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராதாரவியை தற்காலிகமாக நீக்கி திமுக நடவடிக்கை எடுத்தது. அதனை எடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்த ராதாரவி கடந்த சில மாதங்களாக பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டி வந்தார்.

 

இந்நிலையில் சென்னை வந்திருந்த பாஜக தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா முன் நிலையில் ராதாரவி பாஜகவில் இணைந்தார். அதேபோல் திரைப்பட நடிகை நமீதா பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நமீதா கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்த நமீதா, கட்சியின் உறுப்பினர் அட்டையும் பெற்றுக்கொண்டார். அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமீதா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

 

அதற்குப் பின்னர் அரசியல் சார்ந்து இயங்காமல் இருந்து வந்த நமீதா தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். பாஜக தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் நமீதா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


Leave a Reply