நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆவணங்களை ஒப்படைக்கிறேன்…! ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் கறார் பதில்!!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பொன்.மாணிக்கவேல், நீதிமன்றம் தான் தம்மை சிறப்பு அதிகாரியாக நியமித்தது. எனவே தமிழக அரசின் உத்தரவு தம்மை கட்டுப்படுத்தாது என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே ஆவணங்களை ஒப்படைக்க முடியும் என கறாராக பதிலளித்துள்ளார்.

 

தமிழகத்தில் பெருகிவிட்ட சிலை கடத்தல் குற்றங்களை விசாரிப்பதற்காக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இந்தப் பொறுப்பை ஏற்றவுடன் அதிரடியாக பலரை கைது செய்ததுடன், விலை மதிப்பற்ற ஏராளமான சிலைகளையும் மீட்டார். கைதானவர்களில் அரசுப் பொறுப்பில் இருந்த உயர் அதிகாரிகளும் அடக்கம் என்பதால், பொன்.மாணிக்கவேலன் நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழக அரசுத் தரப்பில் அவரது நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதுடன், போதிய வசதிகள், ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. இதனால் தமிழக அரசுக்கும், பொன். மாணிக்கவேலுக்கும் இடையே அடிக்கடி முட்டல், மோதலாகி உயர் நீதிமன்றம் வரை அடிக்கடி பிரச்னை சென்றது.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் பொன்.மாணிக்கவேல் பதவி ஓய்வு பெற்ற நிலையில், தமிழக அரசு மறுத்தும் அவருடைய பணிக் காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டு பணி நீட்டிப்பும் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் பணி நீட்டிப்பு வழங்கக் கோரி பொன்.மாணிக்கவேல் சார்பில் அவரது வழக்கறிஞர் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை வரும் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் பொன்.மாணிக்கவேலன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு தமிழக அரசுத் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்து தமிழக அரசுக்கு பொன்.மாணிக்கவேல் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் தான் என்னை நியமித்தது. எனவே தமிழக அரசின் உத்தரவு என்னைக் கட்டுப்படுத்தாது. நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க எனக்கு அனுமதி இல்லை. மேலும் பணி நீட்டிப்பு தொடர்பான வழக்கு விசாரணையும் டிசம்பர் 6-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் பொன்.மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply