சென்னையில் நள்ளிரவில் பட்டா கத்திகளோடு சுற்றித்திரிந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தின் தலைநகர் சென்னை எப்போதுமே பாதுகாப்பான நகரமாக கருதப்படும்.
50 அடிக்கு ஒரு சிசிடிவி கேமரா, இரவில் ரோந்து செல்லும் காவலர்களின் கண்காணிப்பு ஆகியவற்றையும் மீறி பொதுமக்களின் நெஞ்சை பதறவைக்கும் சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளன. ராயபுரத்தில் உள்ள கிரேஸ் கார்டன் மற்றும் சிங்காரத் தோட்டம் பகுதிகளில் பட்டாக்கத்திகளுடன் மூன்று இளைஞர்கள் சுற்றித்திரிந்து இருக்கிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த விஜயன், சூர்யா, மற்றும் எண்ணூரில் வசிக்கும் மனோ ஆகியோரை கைது செய்துள்ளனர். காவல்துறை விசாரணையில் தலைக்கேறிய போதையில் பட்டா கத்திகளுடன் அப்பகுதி மக்களை அச்சுறுத்தியது தெரியவந்தது.
இதேபோல் கடந்த 26ஆம் தேதி விருகம்பாக்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஷேக் அப்துல்லா நகருக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
சிசிடிவி காட்சியின் அடிப்படையில் நடந்த விசாரணையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா, கேகே நகரை சேர்ந்த ஆதித்யா உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.