மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, காங். தலைவர் சோனியா, மே.வங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பைக்கு பயணமாகியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடந்து, ஆட்சியமைப்பது தொடர்பாக ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை திடீரென முதல்வர் பதவியேற்ற பா.ஜ.க.வின் பட்னா விஸ், பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பதவியேற்ற மூன்றே நாட்களில் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து சிவசேனா – என்.சி.பி, – காங்கிரஸ் கட்சிகள் அமைத்த மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இன்று மாலை 6.40 மணிக்கு மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில், முதல்வர் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. புதிய அமைச்சரவையில், சிவசேனாவுக்கு 15 அமைச்சர் பதவிகளும், என்.சி. பி.க்கு துணை முதல்வர் பதவியுடன் 13 அமைச்சர்கள், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியுடன் 13 அமைச்சர்கள் பதவி என 3 கட்சிகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இன்று ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பதவியேற்பார்கள் என்று கூறப் Uடுகிறது.
இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அதே போல் மே.வங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். அதே வேளையில், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே நேற்றிரவு அவசரமாக டெல்லி சென்றார். காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து சிவசேனா சார்பில் அழைப்பு விடுத்தார். இவர்களில் யார் ? யார்? இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்பது இன்னும் உறுதியாக தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் மும்பைக்கு பயணமானார்.