விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி- 47 ராக்கெட்..! 14 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!!

இந்தியாவின் கார் டோசாட் – 3 மற்றும் 13 நானோ செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.14 செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி- 47 ராக்கெட்டை ஏவுவதற்கான 26 மணிநேர கவுண்ட் டவுன் நேற்று காலை தொடங்கியது. திட்டமிட்டபடி இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி- 47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின் கார்டோசாட் – 3 செயற்கைகோளுடன், 13 நானோ செயற்கை கோள்களையும் சுமந்தபடி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

 

முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1625 கிலோ எடை கொண்ட கார்டோசாப் – 3 செயற்கைகோள், பூமியிலிருந்து 509 கி.மீ. உயரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தவுடன் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கார்டோசாட் சி – 3 செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு உதவும் இந்த கார்டோ சாட் – 3 செயற்கை கோள், 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் .இந்த கார்டோசாட்-3 செயற்கைகோள் வானில் மேகக் கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. மேலும் இரவு நேரங்களிலும் தெளிவான புகைப்படங்களை எடுப்பதுடன் பூமியில் உள்ள வளங்கள், கடற்பகுதிகள் உள்ளிட்ட புவி ஆராய்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply