ஹாய் மச்சான்ஸ்! ரீ-எண்ட்ரீ கொடுக்கும் நமீதா!

திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்த நடிகை நமீதா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனது எடையையும் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் நமிதா.

 

மச்சான்ஸ் இந்த ஒரு வார்த்தை மூலம் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் குடிபெயர்ந்ததவர் நடிகை நமீதா. எங்கள் அண்ணா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நமீதா கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி திரையுலகில் வெற்றி நடை போட்டார்.

 

குறிப்பாக சரத்குமாருடன் ஏய், அஜித்குமார் உடன் பில்லா, விஜயுடன் அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார் நமீதா. ஒரு கட்டத்தில் நாயகியாக கதாபாத்திரங்கள் கிடைக்காததால் சினிமாவில் குத்துப் பாட்டிற்கு மட்டுமே ஆட்டம் போட்டார்.

 

இதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் மங்க திரையுலகை விட்டு விலகி இருந்த நமிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையிலும் கால் பதித்தார். அதன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதில் குடிபுகுந்த நமிதா அடுத்த சில மாதங்களிலேயே தனது நீண்டகால நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

 

திருமண வாழ்க்கையில் நுழைந்த பிறகு குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வந்த நமிதா தேடி வந்த சில சினிமா வாய்ப்புகளை ஏனோ தவிர்த்து வந்தார். இதனிடையே உடல் எடை கூடி காணப்பட்ட நமீதா தற்போது தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டு மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார்.

 

அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா சமூக வலைதளங்களில் அவர் வெளியிட அது ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.ஏற்கனவே நடிகர் பரத்துடன் நமிதா இணைந்து நடித்த பொட்டு படம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் சரியான கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்.

 

நடிகைகளின் வெற்றிகரமான பல ரீ-என்ட்ரிகளை தமிழக ரசிகர்கள் கண்டுள்ள நிலையில் நமிதாவும் ரீ-என்ட்ரிகளை காக தயாராகி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.


Leave a Reply