அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி

வரும் 24-ந் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் வரும் 24-ந் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்தில் நடைபெற உள்ளது. கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் தான் அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

அத்துடன் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கவும் அந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 24-ந் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக சட்டத் திட்டங்கள் படியும்,தேர்தல் ஆணையத்தில் கொடுத்த வாக்குறுதிப்படியும், அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே பொதுக் குழுவை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறி, சேலத்தைச் சேர்ந்த சுந்தரம் என்ற அதிமுக பிரமுகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

 

வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுக்குழு நடத்த தடை விதிக்க மறுத்ததுடன், இந்த வழக்கை சிவில் வழக்காக தொடர அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து சுந்தரம் மனுவை பெற்றதைத் தொடர்ந்து வழக்கு தள்ளுபடியானது.


Leave a Reply