திருப்பதியில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களுடன் நடந்து செல்லும் நாய்

திருப்பதியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுடன் நாய் ஒன்று நடந்து செல்லும் ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுவரை 480 கிலோமீட்டர் தூரம் ஐயப்ப பக்தர்களுடன் நாயும் சென்றுள்ளது.

 

கார்த்திகை மாதம் பிறந்தவுடன் சுவாமி ஐயப்பனை வேண்டி மாலை அணியும் பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். மண்டல பூஜைக்காக சமீபத்தில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் முதாபித்ரி பகுதியை சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் சபரிமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு ராஜேஷ் தலைமையிலான ஐயப்ப பக்தர்கள் இந்த ஆண்டு புதிய அனுபவத்தை கண்டுள்ளனர்.

 

ஏனெனில் அவர்களுடன் நாயொன்று பாதயாத்திரை மேற்கொண்டுள்ளது தான் வியப்பு தரும் விஷயம். கடந்த 31ம் தேதி திருப்பதி கோவிலில் இருந்து பாதயாத்திரையை ராஜேஷ் தலைமையிலான பக்தர்கள் தொடங்கினார். அப்போது அவர்களை பாசக்கார நாய் ஒன்று பின்தொடர்ந்து உள்ளது.

 

தொடக்கத்தில் பக்தர்கள் யாரும் அந்த நாயை கவனிக்கவில்லை. ஆனால் அந்த நாய் அவர்களை பின்தொடர்ந்துள்ளது. கலைப்பாரும் நேரத்தில் தங்களுக்கு உணவு சமைக்கும் பக்தர்கள் நாய்க்கும் உணவு வழங்கியதால் அவர்களுடனேயே நாயும் தங்கியுள்ளது.

 

இதுவரை சுமார் 480 கிலோமீட்டர் தூரம் ஐயப்ப பக்தர்களுடன் நாயும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளது. சுமார் 500 கிலோமீட்டர் தூரம் நடந்தால் நாயின் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

 

கர்நாடக மாநிலம் கோட்டிகாராவை கடந்து பக்தர்களின் பாதயாத்திரை தொடரும் நிலையில் நாயும் அவர்களை பின் தொடர்கிறது. நிச்சயம் அந்த நாய் தங்களுடன் சபரிமலை வரை வரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர் பக்தர்கள்.


Leave a Reply