நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்கியது; வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் பதவியேற்பு!!

நாடாளுமன்ற இரு அவைகளின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் எம்.பி.யாக வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.யாக பதவியேற்றார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு மக்களவை,மாநிலங்களவை கூடியதும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ராம்ஜெத்மலானி மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து,வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவின் கதிர் ஆனந்த் உள்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 எம்.பி.க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் ஓம் பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.கதிர் ஆனந்த், தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து இரு அவைகளிலும் கேள்வி நேரம் தொடங்கியது.

 

அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த குளிர் கால கூட்டத்தொடரில் காஷ்மீர் விவகாரம், பொருளாதார சரிவு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.

 
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply