சீராய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் இல்லை – சன்னி வக்ஃபு வாரியம்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சன்னி வக்பு வாரியத்தின் தலைவர் ஜாஃபர் அகமது பருக்கீ தெரிவித்துள்ளார். ராமஜென்ம பூமி பாபர் மசூதி வழக்கில் முக்கியமான மனுதாரராக சன்னி வக்பு வாரியமும் இடம்பெற்றிருந்தது.

 

இந்நிலையில் தீர்ப்பு குறித்து பேட்டியளித்த சன்னி வக்பு வாரியத்தின் தலைவர் ஜாபர் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வெகுவாக வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் வக்பு வாரியத்திற்கு இல்லை என்றும் கூறினார்.

 

தற்போதைய நிலையில் தீர்ப்பின் விவரத்தை முழுமையாக படித்து பார்த்த பிறகு வக்பு வாரியம் சார்பில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என கூறினார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஏதேனும் ஒரு வழக்கறிஞரோ, தனிநபரோ சீராய்வு செய்யப்போவதாக அறிவித்தால் நிச்சயம் அது சரியான முடிவாக இருக்காது என்றும் ஜாஃபர் தெரிவித்தார்.

 

முன்னதாக தீர்ப்பு வெளியானதும் சன்னி வக்பு வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஜிலானி தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாகவும் தற்போதைய தீர்ப்பில் திருப்தி இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

 

தனது பேட்டி குறித்து விளக்கம் அளித்துள்ள ஜிலானி அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் அதன் செயலாளர் என்பதன் அடிப்படையிலேயே பேசியதாகவும் சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.


Leave a Reply