நீட் தேர்வு விவகாரத்தில், நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப்பாதையில் மத்திய, மாநில அரசுகள் இனியாவது செல்ல வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது. ‘நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, ஏழை மாணவர்களை வேறுபடுத்தும் செயல். பயிற்சி மையங்களால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை . நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப்பெறக்கூடாது?’என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஏழை – எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது. இப்போது சென்னை உயர்நீதிமன்றமே அதனை வழிமொழிந்துள்ளனர். இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய – மாநில அரசுகள் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.