பட்டாசு வெடிப்பதை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்துப்படுகொலை

தனது நண்பனை யாரோ தாக்கி விட்டனர் எனக் கேள்விப்பட்டு அங்கு சென்று அபூபக்கர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் முகமது உமர் அலி. இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இருசக்கர வாகனத்தில் வித்யா நகர் பகுதிக்கு தீபாவளியன்று மாலை 6 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அங்கு சிலர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர் அதில் பட்டாசு ஒன்று முகமது உமர் அலி மீது விழுந்தது.

 

இதனால் கோபமடைந்த முகமது உமர் அலி நடுரோட்டில் ஏன் பட்டாசு வெடிக்கிறார்கள். ஓரமாக வெடிக்கக் கூடாதா எனக் கேட்டுள்ளார். இதையடுத்து இரு தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் சிலர் முகமது உமர் அலியை தாக்கியுள்ளனர். முகமது உமர் அலி தனது நண்பர் நதிமுல்லா மக்கான் தெருவை சேர்ந்த 25 வயது அபூ பக்கரை செல்போனில் அழைத்துள்ளார்.

அபுபக்கர் அங்கு வந்து முகமது உமர் அலி தாக்கப்பட்டது குறித்து எதிர்தரப்பிடம் கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் உருட்டுக்கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களால் அவரை தாக்கியுள்ளனர். அவருடன் வந்த அபு அஹமதையும் தாக்கியுள்ளனர். இருவரும் படுகாயமடைந்ததால் அங்கிருந்தவர்கள் இருவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். செல்லும் வழியில் அபூபக்கர் இறந்துவிட்டார்.

 

அபு அகமது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து கதிரேசன், கௌதம், அஜீத், பாலு உள்ளிட்ட ஆறு பேரை பிடிக்க 4 தனிப்படை அமைத்துள்ளனர். பட்டாசு வெடித்து தட்டிக்கேட்ட இளைஞரை மர்ம கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply