பண உதவி செய்ய மறுத்த தாயை உலக்கையால் அடித்துக் கொன்ற மகன்

பணம் கொடுத்து உதவ மறுத்த தாயை உலக்கையால் அடித்து கொலை செய்திருக்கிறார் ஒரு கொடூர மகன்.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கொல்லங்கோடு என்பவரின் மனைவி ஜோதி அம்மாள். இவருக்கு முத்துப்பாண்டி, ஈஸ்வரன் என்ற 2 மகன்களும், ரேவதி என்ற ஒரு மகளும் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்துடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

 

கணவர் இறந்துவிட்ட நிலையில் ஜோதி அம்மாள் அந்த ஊரிலேயே தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், மகன் முத்துப்பாண்டிக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால், தாயிடம் வந்து கடனை அடைக்க உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் தம்மிடம் பணம் ஏதும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் ஜோதி அம்மாள். ஆனால் இதனை நம்ப மறுத்த முத்துப்பாண்டி, தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முத்துப்பாண்டி அருகே கிடந்த உலக்கையை எடுத்து தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜோதியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் இது குறித்து முத்துப் பாண்டியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பணம் கொடுக்காததால் பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply