காதுக்குப் பதில் தவறுதலாக தொண்டையில் ஆபரேசன் – அம்பத்தூர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளை மாற்றி செய்துவிடுவது, அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து விடுவது போன்ற நகைச்சுவை துணுக்குகளை படித்திருப்போம். ஆனால் நிஜத்திலேயே சிறுமி ஒருவருக்கு காதில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

 

சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்த பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம்-கலா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் ஒன்பது வயதான இரண்டாவது மகளுக்கு காது குத்தியதில் பிரச்சினை ஏற்பட்டு அந்த பகுதியில் கட்டி ஒன்று உருவாகியுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது, அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

எனவே அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர் .பின்னர் ஆபரேஷன் தியேட்டருக்கு சிறுமியை அழைத்துச் சென்று இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள்.

சிறிய அறுவை சிகிச்சைக்கு இவ்வளவு மணி நேரமா? என சந்தேகம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பிய போது தான் தவறு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. சிறுமியின் காதில் உள்ள கட்டியை அகற்றுவதற்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் விவரம் தெரியவந்துள்ளது.

 

சிறுமியின் மருத்துவக் குறிப்பு, மருத்துவ கையேடு ஆகியவற்றில் காது அறுவை சிகிச்சை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை அரங்கம் முன்பு ஒட்டப்பட்டுள்ள குறிப்பில் தொண்டை அறுவை சிகிச்சை என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுமியின் மருத்துவ குறிப்பேட்டை பார்க்காமல் மருத்துவர்கள் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து சதைப் பகுதிகளை அகற்றியுள்ளனர். இதையறிந்து ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் அறுவைசிகிச்சை அரங்கத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உறவினர்களை சமாதானப்படுத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தவறான அறுவை சிகிச்சை செய்ததை ஒப்புக்கொண்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் தருவதாகவும் மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து சிறுமியின் உறவினர்களிடம் மருத்துவ நிர்வாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எனினும் தொண்டையில் நடத்தப்பட்டுள்ள அறுவை சிகிச்சையால் சிறுமிக்கு என்ன பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அச்சிறுமியின் பெற்றோர் உள்ளனர்.


Leave a Reply