உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி !!!

கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை சார்பாக உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.உடல் பருமன் அதிகரிப்பு உலக அளவில் மிகப்பெரிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாக கருதப்படுகிறது.அதிக உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உடல் பருமனுக்கு எதிரான தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை பி. எஸ்.ஜி.மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

இதில் பி.எஸ்.ஜி. கல்வி குழுமங்களை சேர்ந்த பி.எஸ்.ஜி.இன்ஸ்டிட்யூசன்,கலை மற்றும் அறிவியல் கல்லூரி,மருத்துவ ஊட்டச்சத்து துறை,மருந்தியல் மற்றும் பிசியோதெரபி கல்லூரி,நர்சிங் கல்லூரி,பி.எஸ்.ஜி.சர்வஜன உயர்நிலை பள்ளி போன்ற கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கைகளை கோர்த்து உடல் பருமன் தகவல்கள்,அதனால் ஏற்படும் அபாயங்கள் ,சமூகத்தில் தேவையான உணவு மாற்றங்கள் என பல்வேறு உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியபடி மனித சங்கிலியாக நின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுருகன்,தற்போது உடல் பருமன் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் இவற்றை குறைப்பதில் முதல் கட்டமாக சரியான உணவு முறையும்,நல்ல உடற்பயிற்சியும் தேவை என கூறினார். உடல் பருமன் அதிகரிப்பது, இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதாக கூறிய அவர்,உடல் பருமனை குறைக்க தவறான வழிகளை தேர்ந்தெடுக்காமல் தகுதியான மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்து கொள்வதோ அல்லது சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் உணவியல் நிபுணர் பரிமளா தேவி உட்பட துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply