தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் 3 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது வரை மூன்று பேர் டெங்குவால் உயிரிழப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் சென்று நலம் விசாரித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் 132 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இவர்களில் 8 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் மட்டும் 100 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.