சொத்து வரி உயர்வை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது !!!

கோவை மாநகராட்சி நிர்வாகம் விதி்த்துள்ள 100 சதவீத சொத்துவரி உயர்வை கண்டித்தும், சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் உரிமையை வழங்கியிருப்பதை கண்டித்தும் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை மாநகர காவல் துறையின் தடையை மீறி கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

கோவை மாநாகராட்சியில் உயர்த்தப்பட்ட 100 சதவீத சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருப்பதை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் முழுஅடைப்பு போராட்டத்திற்கு தடை விதித்தது.இதனை தொடர்ந்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 27 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் காவல்துறையிடம் கேட்கப்பட்டது.ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சொத்துவரி மற்றும் சூயஸ் விவகாரங்களை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அக்டோபர் 10 ம் தேதி (இன்று) கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையில் மனு அளிக்கப்பட்டது. நேற்று இரவு காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்தனர்.

 

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் காவல் துறை தடையை மீறி இன்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ், கொ.ம.தே.கட்சி உட்பட மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தின் போது சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த்தினை திரும்ப பெற வேண்டும்,100 சதவீத சொத்து வரியினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது, காவல் துறையினருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது,பேட்டியளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், சொத்துவரி உயர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், அதுவரை போராட்டம் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், முறையாக போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பதாகவும் கார்த்திக் குற்றம்சாட்டினார். ஆர்ப்பாட்டம் காரணமாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


Leave a Reply