மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த தேவையில்லை என கர்நாடக அரசு கூறியிருப்பதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் இந்த அணுகுமுறை இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவை எந்த வகையிலும் பயன் அளிக்காது என தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு கூறியிருப்பது தன்னிச்சையானது என்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் உரிமைகளை எதேச்சதிகாரம் ஆக அத்துமீறி அபகரிக்கும் முயற்சி என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கர்நாடக அரசும் மத்திய அரசும் உணர வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் திட்டத்திற்கு அனுமதி கோரி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இரு மாநில மக்களின் நல்லுறவு கருதி மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.