கோவையில் தனியார் பாரில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய பைனான்சியர் கைது

கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்த பைனான்சியர் தனியார் பாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக எழுந்த புகாரையடுத்து போலீசார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்தவர் ஜான்சன்.பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்பாபா காலனி என். எஸ்.ஆர் சாலையில் உள்ள ஜே.கே ஹோட்டல் எனும் தனியார் பாரில் மது அருந்தி உள்ளார்.

அப்போது,பார் ஊழியர்கள் பணம் கேட்டதால் மது போதையில் இருந்த ஜான்சன் பணம் தரமுடியாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அதேபோல் பாரில் குடித்துக் கொண்டிருந்த மற்றவர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்த சாய்பாபா காலனி போலீசார் ஜான்சனை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்சனிடம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பொது இடத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் ஜான்சனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும்,இவர் பைனான்ஸ் தொழிலில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து பொதுமக்களை மிரட்டி வசூல் செய்ததாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply