விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பூட்டிய வீட்டை உடைத்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை ஏபி காலனியில் காமராஜர் தெருவில் வசிக்கும் அசோகன் என்பவர் நேற்று காலையில் வழக்கம் போல பணிக்கு சென்று உள்ளார். வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் தீபாவளிக்காக புது ஆடைகள் வாங்குவதற்காக மதுரை செல்வதற்காக காலையில் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பணிபுரிந்த வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 சவரன் தங்க நகைகள் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.