தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி இடித்து பலத்த மழை பெய்யத் துவங்கியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் கிராமப்புற பகுதியில் மதியம் திடீரென கருமேகம் சூழ்ந்து மிதமான மழை பெய்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து தண்ணீர் பற்றாக்குறை தீரும் என நம்பிக்கை தெரிவித்தனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. பிற்பகலில் கடும் வெப்பம் கொளுத்திய நிலையில் மதியம் சுமார் அரை மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.