பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவாஜி கணேசனின் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை கிண்டல் செய்ததாக எழுந்த கண்டனத்திற்கு நடிகர் விவேக் விளக்கமளித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விவேக் அந்த படத்தில் விஜய் நடித்து பாடியிருக்கும் நெஞ்சில் குடியிருக்கும் என்ற பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.
நெஞ்சில் குடியிருக்கும் என்ற வார்த்தை சிவாஜி கணேசன் எடுத்த இரும்புத்திரை என்று திரைப்பட பாடலிலும் இடம் பெற்றதாக கூறிய விவேக் அப்போது அந்த வார்த்தைகளுக்கு இருந்த அர்த்தமே வேறு என்றும், தற்போது விஜய் அந்த வார்த்தையை பாடலாக பாடும் போது அது மந்திர சக்தியாக மாறுகிறது என்றும் கூறினார். விவேக்கின் இந்த பேச்சுக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்து இருக்கும் விவேக் 1960ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் வைஜெயந்தி நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் வெளியான நெஞ்சில் குடியிருந்தால் பாடல் காதல் உணர்வை வெளிப்படுத்துவது என்று கூறியுள்ளார். ஆனால் இப்போது விஜய் அந்த வார்த்தையை கூறும்போது மந்திரசக்தி வார்த்தையாக இருக்கிறது என்று பேசியதாக நடிகர் விவேக் கூறியுள்ளார். மேலும் தாம் அவ்வாறு பேசவில்லை அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க எனவும் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.