ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதுடன் வீடுகள் தோறும் வண்ணமயமாக அத்தப்பூ கோலமிட்டு, விஷூக்கனி படையலிட்டு உற்சாகமாக, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வாமன அவதாரத்தில் உலகை அளந்த மகா விஷ்ணுவுக்கு கேரளத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி தன் தலையை கொடுத்தார் என்பது புராண வரலாறு. பாதாளத்துக்குச் சென்ற மகாபலி மன்னன் மகா விஷ்ணுவின் அருளால், ஆண்டுதோறும் சிங்க மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் தனது நாட்டு மக்களைக்காண வருவதாகவும், அந்த நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெறும். மகாபலி மன்னனை வரவேற்க மக்கள் தங்களின் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, வீடுகளில் படையலிட்டு வழிபடுவது வழக்கம். கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாகவே ஓணம் பண்டிகை களைகட்டியது.
ஓணம் பண்டிகை நாளான இன்று கோவை சித்தாப்புதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.காலை முதல் புத்தாடை அணிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மாலை வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.
மேலும்,மதியம் ஓணம் சத்யா எனப்படும் அன்னதானமும் கோவிலில் வழங்கப்பட உள்ளது. வீடுகளிலும், கோவில்களிலும் அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி படையலிட்டு வண்ணமயமான ஓணம் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.