மதுபோதையில் இளம்பெண்ணை துரத்திச் சென்று ஆபாசமாகப் பேசிய காவலர்

கோவை அருகே மதுபோதையில் இளம் பெண்ணை துரத்தி சென்று ஆபாசமாக பேசிய காவலரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பனியன் கோவில் பகுதியில் ரவிக்குமார் என்பவர் பட்டறை நடத்தி வருகிறார்.

 

இவரது மனைவி சரண்யா, தனது உறவினரை பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அத்திபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே மது போதையில் நின்றிருந்த பிரபாகரன் என்ற காவலர் சரண்யாவை தனது இருசக்கர வாகனத்தில் முந்திச் சென்று வழிமறித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா அங்கு உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றில் தஞ்சம் அடைந்ததோடு தனது கணவருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். ஆனால் அதற்குள் காவலர் பிரபாகரனின் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருப்பதும் தனது இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

 

மேலும் காவலர் பிரபாகரன் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பிரபாகரனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply