திமுக எம்பி கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதையடுத்து பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 5 லட்சத்து 63 ஆயிரத்து 543 வாக்குகள் வெற்றி பெற்றார்.

 

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை விட அவர் 3 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கனிமொழியின் வேட்புமனுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அவரது கணவர் மற்றும் மகனின் சிங்கப்பூர் குடிமக்கள் பதிவுச் சான்றிதழ்களை கனிமொழி இணைக்க வில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பரப்புரையின் போது ஆர்த்தி எடுத்த பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதாக கனிமொழி மற்றும் திமுக பிரமுகர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட மனுவில் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கு நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

 

தேர்தல் ஆணையம் தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. திமுக எம்பி கனிமொழி தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை இம்மாதம் 23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Leave a Reply