ஆர் எஸ்.மங்களம் தாலுகா உப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் ஆலய திருக்கல்யாண வைபவம் அதி விமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களம் தாலுகா ஆர்.எஸ். மங்களம் அருகே உப்பூர் கிராமத்தில் அருள் மிகு வெயிலுகந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கோவிலாகும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து 8-வது நாளான இன்று மாலை 4 மணி அளவில் சித்தி புத்தி ஆகிய இரு தேவிகளுடன் விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முன்னதாக சித்தி புத்தி தேவியருடன் விநாயகர் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்த மாலைமாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் திருமண அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழகத்தில் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது இங்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றார்கள்.