ஜி.எஸ்.டி.மாதாந்திர வரி தாக்கலை எளிதாக்க மத்திய அரசு முயற்சி !!!

ஜி.எஸ்.டி.மாதாந்திர வரி தாக்கலை எளிதாக்க சில மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், அக்டோபர் மாதத்தில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக கோவை மண்டல ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி முதன்மை ஆணையர் ராஜேஷ் சோதி தெரிவித்துள்ளார்.

கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள ஜி.ஸ்.டி. மற்றும் கலால் வரியின் மண்டல அலுவலகத்தில் முதன்மை ஆணையர் ராஜேஷ் சோதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ஜி.எஸ்.டி. ஆண்டு வரி செலுத்துவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில்,கோவை மண்டல ஜி.எஸ்.டி. அலுவலகம் சார்பில் 10 நாட்கள் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. வரி தாக்கல் தொடர்பான பயிலரங்கம் துவங்கியுள்ளதாகவும், கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் திருச்சி சாலையில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகம் , நீலகிரி மாவட்டம் குன்னூர், திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய மாவட்ட அலுவலகங்களிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களை தொழிற்துறையினர் அணுகி பயன்பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

மேலும்,தொழிற்துறையினரின் தொழில்நுட்ப ரீதியான சந்தேகங்களை, வரி தாக்கல் சிக்கல்களை தீர்த்துக்கொள்ள இந்த பயிலரங்கம் உதவும் என்றவர், இந்தியா முழுதும் 20% மட்டுமே ஜி.எஸ்.டி. வரி செலுத்தியுள்ளதாகவும், கோவையை பொறுத்தவரை இந்த எண்ணிக்கை பாராட்டுக்குரியதாக இல்லை என்றார்.

 

கோவை மண்டலத்தில் 2017 ஆம் ஆண்டு 25,000 ஆக இருந்த ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் எண்ணிக்கை தற்போது இரு மடங்காக 2019ல் 66,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், வழக்கமாக இருப்பதை விட தொழிற் துறையினர்  ஜி.எஸ்.டி. வரி தாக்கல் செய்வதில் உள்ள இடர்பாடுகளை களைய தேவையான உதவிகளை செய்வதற்கு கூடுதலாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,2018-2019 ஆண்டில் ரூ.ஆயிரத்து 798 கோடியும், 2019-2020 ஜூலை, 2019 வரையிலான காலத்தில் ரூ.677 கோடியும் கோவை மண்டலத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளதாகவும், கால தாமதமாக தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாளைக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Leave a Reply