இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி பாஜகவினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் 370வது சிறப்பு சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். மேலும்,ஆளும் மத்திய பாஜக அரசையும் அவர் விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க-வினர் கோவை தேர் நிலைய வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது,இந்திய ஒருமைப்பாட்டுக்கும், தேசிய இறையாண்மைக்கும் எதிராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் திமுகவைத் தடை செய்ய வேண்டும் எனவும், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி, இந்தியாவில் இருந்து கொண்டு தனி கொள்கையையும், கருத்துரிமையும் திமுக கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். இந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் நடவடிக்கையை திமுக இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும்,அவர் வலியுறுத்தினார்.