தேங்கி வரும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன தொழில் நுட்பத்தை செயல்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் தனி இயக்குனர் வேண்டுகோள் !!!

கோவையில் தற்போது அதிகம் தேங்கி வரும் குப்பைகளை அழித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன தொழில் நுட்பத்தை செயல்படுத்த கோவை மாநகராட்சி முன்வர வேண்டும் என கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் தனி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 850 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கிறது. காய்கறி கழிவில் இருந்து காஸ் தயாரித்து, மின்சாரமாக்கி, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் ‘பிளாண்ட்’ வெள்ளலுார் கிடங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

உரம் தயாரிப்பு மையம், எனும் ‘மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்’, தரம் பிரித்து குப்பை சேகரித்தல் என பல்வேறு திட்டங்களை செயல் படுத்தினாலும் மாநகரில் குப்பைகள் சேகரித்து அதனை அழிப்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாகவே உள்ளது.

 

இந்நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சீனாவில் குப்பைகளை நிரந்தரமாக அழிப்பதற்கான நவீன தொழில் நுட்ப முறையை கோவையில் பயன்படுத்துவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும் என கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டியின் தனி இயக்குனர் கிருத்திகா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சீனாவில் ஒரு நிறுவனத்திடம் குப்பைகளை நிரந்தரமாக அழிப்பதற்கான தொழில் நுட்பம் உள்ளது.இதனை பல்வேறு நாடுகளில் செயல்படுத்தி வருவதாகவும், குப்பைகளை அழித்து அதிலிருந்து மின்சாரம் பெறும் இந்த தொழில் முறை குறித்து தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் உடன் இது குறித்து பேசி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த குப்பைகளை அழிக்கும் தொழில்நுட்பத்தை கோவை மாநகரில் கொண்டு வருவதன் மூலம் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.


Leave a Reply