ஜெய்ப்பூரில் மன்மோகன்சிங் இன்று வேட்பு மனு தாக்கல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், 86, கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார்; சமீபத்தில், அவரது பதவிக் காலம் முடிவடைந்தது.மீண்டும் அவரை, ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வு செய்ய, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், காங்கிரசுக்கு போதிய உறுப்பினர்கள் இல்லை. இதனால், அவரை மீண்டும் ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, பா.ஜ., சார்பில், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த, மதன் லால் சைனி, சமீபத்தில் இறந்தார்.

ராஜ்யசபாவில், அவரது இடம் காலியானது. ராஜஸ்தானில், தற்போது காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், இங்கிருந்து, ஒரு ராஜ்யசபா, எம்.பி.,யை தேர்வு செய்யும் அளவுக்கு, காங்கிரசுக்கு சட்டசபையில் பலம் உள்ளது.இதையடுத்து, இந்த இடத்துக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை போட்டியிட வைக்க, காங்., மேலிடம் முடிவு செய்தது.

இதையடுத்து, இன்று, ஜெய்ப்பூர் வரும் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். ராஜஸ்தான் துணை முதல்வரும், மாநில, காங்., தலைவருமான, சச்சின் பைலட், இந்த தகவலை தெரிவித்தார்.


Leave a Reply