ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. கடந்த 5 ம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பபெற்றது. மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு காஷ்மீர் , லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
தொடர்ந்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்ததுடன் இண்டர்நெட்,டெலிபோன்சேவையை முடக்கியது. தற்போது காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் இயல்புநிலை திரும்பி வருவதால் தடை உத்தரவு விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தலைநகர் ஸ்ரீநகரில் பதட்டம் நிலவுவதால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளது.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் ஒருசில நடவடிக்கைகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது.மாநிலம் முழுவதும் அமைதி நிலவுவதாகவும், மக்கள் எந்தவித வதந்தியையும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய-மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன.ஏ.டி.எம். மையங்கள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதுடன், பணமும் நிரப்பி வைக்கப்படுகின்றன.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால், எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அமைதியான பக்ரீத் கொண்டாட்டமாக இந்த ஆண்டு பண்டிகை இருக்கும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர், அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.