9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை

தெலங்கானாவில் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியை சேர்ந்தவர் கோலிபகா பிரவீன். இவர் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி 9 மாத குழந்தை ஒன்றை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக புகார் எழுந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் பிரவீனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து பிரவீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.இந்த வழக்கை வாராங்கல் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது பிரவீன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய 30 சாட்சியங்களை நீதிபதிகள் விசாரித்தனர்.

 

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரவீனுக்கு மரண தண்டனை அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு 48 நாட்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இது தொடர்பாக வாராங்கல் காவல்துறை கமிஷ்னர் ரவீந்தர், ‘இந்த வழக்கை நாங்கள் ஒரு சவாலாக எடுத்து விசாரித்தோம். விசாரணை தொடங்கிய 21 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply