சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி உதவுமாறு கோவை மாவட்ட கலெக்டரிடம் தேசிய வீல்சேர் வாள் வீச்சில் தங்கம் வென்ற கோவை வீராங்கனை தீபிகா ராணி கோரிக்கை மனு அளித்தார்.
கோவை உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் இராமநாதன். டீக்கடையில் வேலை செய்பவர்.இவரது மகள் தீபிகா ராணி(19). மாற்றுத்திறனாளி வீராங்கனை.சிறு வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்தாலும், மனம் தளராமல், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது தேசிய வீல்சேர் வாள் வீச்சு போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழக பெண்கள் அணி சார்பில் பங்கேற்ற இவர்,சேபர் பிரிவில் தங்கமும்,பாய்ல் பிரிவில் வெள்ளியும் வென்றார். இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு வந்த இவர் மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, மாற்றுத்திறனாளி பெண்ணாகிய நான் பி.காம் படித்துள்ளேன். எனது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை எண்- TN/CBE.LD/558 ஆகும். குமரகுரு கல்லூரி அளித்த இலவச வாள் வீச்சு பயிற்சி மற்றும் மருத்துவர் ஆல்பர்ட் பிரேம்குமாரின் ஊக்குவிப்பு ஆகியவற்றால் கடந்த ஒராண்டு காலமாக வீல்சேர் வாள் வீச்சு பயிற்சி மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன். மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது தேசிய வீல்சேர் வாள்வீச்சு போட்டி,கடந்த மாதம் 26-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது.
இதில் தமிழக பெண்கள் அணி சார்பில் பங்கேற்று, சேபர் பிரிவில் தங்கமும்,பாய்ல் பிரிவில் வெள்ளியும் வென்றேன். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள் அதிக விலைமதிப்பு உள்ளவை. சொந்த விளையாட்டு உபகரணங்கள் இருந்தால் தான் போட்டிகளில் பங்கு பெற முடியும்.
இவற்றை வாங்கி தரும் அளவிற்கு எனது குடும்பத்திற்கு வசதி இல்லை.எனவே,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்க விளையாட்டு உபகரணங்களை வாங்கி தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் செய்யும் இந்த உதவியால் உலக போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்று தரும் எனது கனவு நனவாகும்.இவ்வாறு அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.