வேலூரில் மக்களவை தேர்தலில் 72 சதவீதம் வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற நிலையில், இத்தொகுதியில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த் உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 

தொகுதியில் ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 என மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். தேர்தலையொட்டி, வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு தொடர்ந்து அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.குறிப்பாக, தொகுதிக்கு உட்பட்ட வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட நகரப் பகுதிகளைவிட கிராமப்புற வாக்குச்சாவடிகளில் தொடக்கம் முதலே வாக்காளர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

 

பிற்பகல் வரை கூட்டம் இன்றி காணப்பட்ட நகர்ப்புற வாக்குச்சாவடிகளிலும் மாலை 3 மணிக்குப் பிறகு வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வந்திருந்தனர். இதில், ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டினர். வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி நகர்ப்புற பகுதிகளில் அதிகமுள்ள இஸ்லாமியர்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதனால், காலை 9 மணிக்கு 7.40 சதவீதம், 11.15 மணிக்கு 14.61 சதவீதம், மதியம் ஒரு மணிக்கு 29.46 சதவீதம், 3 மணிக்கு 52.32 சதவீதம், மாலை 5 மணிக்கு 62.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்த 6 மணி நிலவரப்படி, 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பேரவைத் தொகுதிவாரியாக பதிவானவற்றில், குடியாத்தம் தொகுதியில் அதிகபட்சமாக 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து, அணைக்கட்டு 75 சதவீதம், கே.வி.குப்பம் 72 சதவீதம், வாணியம்பாடி 72 சதவீதம், ஆம்பூர் 70 சதவீதம், வேலூர் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.மேலும், இந்த தேர்தலின்போது, 2 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 22 விவிபேட் இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து, அவை உடனடியாக மாற்றப்பட்டு, தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றன.

 

இதன் அடிப்படையில், தேர்தல் அமைதியாகவும், மிக நல்லபடியாகவும் நடந்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மண்டலத் தேர்தல் அலுவலர்கள் மூலமாக துணை ராணுவப் பாதுகாப்புடன் வாலாஜா சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

 

அங்கு பேரவைத் தொகுதி வாரியாக ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருந்த அறைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து இந்த மையங்களில் மூன்றடுக்கு நிலையில் துணை ராணுவம், தமிழக சிறப்புக் காவல் படை, தமிழக போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலையொட்டி, 20 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவம், 12 கம்பெனிகளைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் உள்பட மொத்தம் 6 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

ஆக.9-இல் வாக்கு எண்ணிக்கை வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.9) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. அன்று காலை சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு, பேரவைத் தொகுதிவாரியாக மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பதால் அதிகபட்சம் 21 சுற்றுகளில் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply