வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக 2 கோடி ரூபாய் பறித்த மோசடி பேர்வழிகள் மூவர் கைது

கோவை மாவட்டம் வீரகேரளத்தில் வசிப்பவர் சுந்தர்ராஜன்.இவரது மூத்த மகன் ஸ்ரீராம்.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து வெளிநாட்டு வேலைக்காக தேடி வந்துள்ளார்.அப்போது,அவரது நண்பர் மூலம் அன்னூர் பசூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் அருண் என்பவர் பழக்கமாகியுள்ளார்.

 

அருண் கோவை கணபதியில் Kaydins Job Solution என்ற பெயரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வரும் பிரின்ஸ் டேனியல் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.பின்னர்,பிரின்ஸ் டேனியல் மற்றும் அவரது அலுவலக மேலாளர் விக்னேஷ் பாரதி ஆகியோர் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி அதற்கு 4 லட்ச ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

அதனை உண்மை என நம்பிய ஸ்ரீராம் தவணை முறையில் 2 லட்ச ரூபாய் மற்றும் பாஸ்போர்டை கொடுத்துள்ளார்.மேலும்,2 லட்ச ரூபாய் கொடுத்தால் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து நாட்களை கடத்தி சென்றுள்ளனர்.

 

ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஸ்ரீராம் பிரின்ஸ் டேனியல் அலுவலகத்திற்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது,அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.அவரைப்போல் பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றிவிட்டு பிரின்ஸ் டேனியல்,அருண்,விக்னேஷ் பாரதி உள்ளிட்டோர் தலைமறைவாகியுள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸ் டேனியல்,விக்னேஷ் பாரதி,அருண் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் இம்மூவரும் சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைவாங்கித்தருவதாக கூறி 100க்கும் மேற்பட்டோரிடம் 2 லட்ச ரூபாய் முதல் 4 லட்ச ரூபாய் என சுமார் 2 கோடி ரூபாய் வரை பெற்றுக்கொண்டு வேலை பெற்றுக்கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

மேலும்,பிரின்ஸ் டேனியல் அலுவலகத்தை சோதனையிட்டதில் 26 பாஸ்போர்டுகள்,லேப்டாப்,ரசீது புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

கோவையில் இதுபோன்ற மோசடிகள் அதிகளவில் நடைபெற்று வருவதால் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறும் மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Leave a Reply