பெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு வினோத்குமார் (வயது 23) என்கிற மகனும், கீர்த்தனா(19) என்கிற மகளும் உள்ளனர்.
வினோத்குமார் பொறியியல் படிப்பு முடித்து விட்டு தற்போது சீனாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கீர்த்தனா 2017-18 ஆம் கல்வி ஆண்டில் சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து அரசு பொதுத்தேர்வில் 1,053 மதிப்பெண்கள் பெற்றார். கீர்த்தனாவுக்கு சிறிய வயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்து வந்ததாம்.இதையடுத்து அவர் கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதினார். ஆனால் அப்போது 202 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் கீர்த்தனா மருத்துவ படிப்புக்குச் செல்லமுடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும் சோர்வடையாமல் மீண்டும் ‘நீட்’ தேர்வில் எப்படியாவது அதிகமான மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பை படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னையில் தங்கியிருந்து ஒரு அகாடமியில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதையடுத்து கடந்த மே மாதம் நடந்த ‘நீட்’ தேர்வில் கீர்த்தனா 384 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
ஆனால் சமீபத்தில் சென்னையில் நடந்த மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்விற்கு கீர்த்தனா அழைக்கப்படவில்லை. மேலும் பி.டி.எஸ். கலந்தாய்விற்கு அழைக்கப்படலாம் என்று கீர்த்தனாவும், அவரது பெற்றோரும் காத்திருந்தனர். ஆனால் அதற்கும் அழைக்கப்படவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே கீர்த்தனாவுடன் தொடக்கக் கல்வியில் இருந்து மேல்நிலைக்கல்வி வரை ஒன்றாக படித்த தோழி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில், கீர்த்தனாவை விடக் குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
ஆனால் அவர் ‘நீட்’ தேர்வில் கீர்த்தனாவை விட அதிக மதிப்பெண் பெற்று, தற்போது எம்.பி.பி.எஸ். படிக்க ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த கீர்த்தனா ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறி பெற்றோரிடம் புலம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளியூரில் கீர்த்தனாவின் உறவினரான ஒருவர் இறந்து விட்டதால், துக்க காரியத்திற்கு செல்வதற்கு அவரது தாய் சுசீலா நேற்று காலையில் புறப்பட்டார். சுசீலாவை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து ஏற்றி விட, அவரது கணவர் செல்வராஜ் சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு சென்றார்.
அப்போது செல்வராஜூக்கு வீட்டில் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் மின் விசிறியில், கீர்த்தனா தான் அணிந்திருந்த துப்பட்டாவினால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.
இதனைக் கண்ட செல்வராஜ் தனது மகளைக் கட்டியணைத்துக் கதறி அழுதார். இதனையறிந்த அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்தனர். இதற்கிடையே தகவலறிந்து வீட்டிற்கு வந்த தாய் சுசீலாவும் தனது மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘