வாசலில் மாக்கோலமும், வண்ண பலூன்களும் ஈர்க்கின்றன. இரவில் வண்ண விளக்குகளால் அந்த வளாகமே ஜொலிக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் அலங்கரிக்கப்பட்டு பொலிவுடன் உள்ளது அந்த கட்டடம். இது ஏதோ திருமண மண்டபமோ, அல்லது கிரஹப்பிரவேசம் காணும் வீடோ அல்ல; முதலாவது ஆண்டு விழா கொண்டாடியுள்ள, 15 வேலம்பாளையம் காவல் நிலையம் தான் அது.
திருப்பூர், 15 வேலம்பாளையம் காவல் நிலையம் தொடங்கப்பட்டதன் முதலாவது ஆண்டு விழா, அண்மையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக, காக்கி உடையில் நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாகவும், மிரட்டும் அவர்களின் பார்வையில் அன்று கனிவு இருந்தது. இன்முகத்துடன் காவலர்கள், தங்கள் காவல் நிலைய ஆண்டு விழாவை, தங்களது குடும்ப விழா போல் குதூகலமாக, அப்பகுதி மக்களுடன் கொண்டாடி உள்ளனர்.
விழாவிற்கு வந்தவர்களை, பாரம்பரிய புடவை அணிந்திருந்த பெண் காவலர்கள், பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமாரை, 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் வரவேற்றார். அவருக்கு, காவலர்கள் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை அளித்தனர்.
இதை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். இனிப்புகள் வழங்கப்பட்டன. முதலாம் ஆண்டு விழாவை ஒட்டி, காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பூந்தோட்ட வளாகத்தை, காவல் ஆணையர் திறந்து வைத்தார். விழா நினைவாக, அங்கு மரக்கன்று நடப்பட்டது.
அதேபோல், காவல் துணை ஆணையர் உமா, துணை ஆணையர் பிரபாகரன், உதவி ஆணையர்கள் சுந்தரராஜன், கஜேந்திரன், ரமேஷ் கிருஷ்ணன், 15 வேலம்பாளைய காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டனர். இவ்விழாவில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
வழக்கமாக, காவல் நிலையம் என்றாலே மக்கள் மனதில் ஒருவித அச்சம் நிலவுவதுண்டு. ஆனால், அதை போக்கி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை தரும் வகையில் வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்டவர்கள், அன்பு பொங்க, ஆண்டு விழாவை கொண்டாடி, மற்ற காவல் நிலையங்களுக்கு சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் – காவல் துறையினர் மத்தியில் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில், வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் தலைமையில் காவல்துறையினர் கொண்டாடி இருக்கும் முதலாம் ஆண்டு விழா, அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
நல்லதொரு முயற்சிக்கு வித்திட்ட காவல் ஆய்வாளர், அதற்கு துணை நின்ற காவலர்கள் மற்றும் முதலாம் ஆண்டு விழா கொண்டாடியுள்ள காவல் நிலையத்திற்கு, ‘குற்றம் குற்றமே’ வார இதழ் சார்பில், நல்வாழ்த்துகள்.