தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடபுத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்ட புத்தகத்தில், தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரான ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவர் எழுதிய இந்தப் பாடத்தில் தொன்மையான மொழிகள் உருவான ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில், தமிழ் கி.மு. 300ஆம் ஆண்டில் உருவானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் பிற தொன்மை மொழிகளான சீன மொழி கி.மு. 1250ஆம் ஆண்டிலும், கிரேக்கம் கி.மு.1500ஆம் ஆண்டிலும், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆம் ஆண்டிலும் உருவானதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்மொழி 5000 ஆண்டுகள் பழமை ஆனது என அறிஞர்கள் கூறிவரும் நிலையில், தற்போது 2300 ஆண்டுகள்தான் பழமையானது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ் மொழி கிமு 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியது என்று 12ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது உடனடியாக திருத்தப்படும்என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், தவறாக குறிப்பிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
அத்துடன், பாடப்புத்தகத்தில் உள்ள தவறுகளை திருத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும்உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழிதான் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.