சந்திரயான் 2 விண்கலத்தின் புவி வட்டப்பாதை இரண்டாவது முறையாக நள்ளிரவு 1 மணியளவில் வெற்றிகரமாக மாற்றப்பட்டது.சந்திரயான் 2 விண்கலம் புவியை சுற்றி அடுத்தடுத்த பெரிய வட்டப்பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நீண்ட தூரம் விலகிச் சென்று அங்கிருந்து நிலவின் பாதையை நோக்கி பயணிக்கும்.
கடந்த திங்களன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதையை மாற்றும் முதல் பணி கடந்த 24ம் தேதி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.அதாவது குறைந்தபட்சம் 230 கிலோமீட்டர் தூரமும் அதிகபட்சம் 45ஆயிரத்து 163 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட பாதைக்கு மாற்றப்பட்டது. விண்கலத்தில் உள்ள உந்துவிசை அமைப்பின் உதவியோடு விண்கலம் உந்தப்பட்டு 40 நொடிகளில் அடுத்த பாதைக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் இதன் பாதையை மாற்றும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது. குறைந்தபட்சம் 251 கிலோ மீட்டரும் அதிகபட்சம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட பாதையில் விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.அடுத்ததாக வரும் 29ம் தேதி பாதை மாற்றப்படுகிறது. இது போல மொத்தம் 5 முறை சந்திரயானின் பாதை மாற்றப்பட்டு பூமியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு திருப்பி விடப்படும்.
இறுதியாக அதிகபட்சம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 505 கிலோ மீட்டர் தூரத்தை எட்டி அங்கிருந்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கும். எனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை சந்திரயான் 2 அடையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.