மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவிற்கு வரவேற்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை வரவேற்பதாக மக்களவையில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார். மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோட்டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: மத்திய அரசு சாலை ஒருங்கிணைப்பை விரிவாக்க உறுதிபூண்டுள்ளது.

 

மேலும், நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்தியச் சாலைகளில் சிறந்த உள்கட்டமைப்பு வசதி மற்றும் பாதுகாப்பை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்துவரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்குப் பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த மசோதாவை அமல்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

இணையதளம் வாயிலாக வரி செலுத்தும் புதிய தொழில்நுட்பமானது இடைத்தரகர்கள் இல்லாத, ஊழல் இல்லாத நிலையை உருவாக்கும். ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும், இதற்கு திறனற்ற ஓட்டுனர்களாக மைனர்கள் இருப்பதுதான் பிரதானக் காரணமாக உள்ளது. மேலும், நாட்டில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவையாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இதுபோன்ற சூழலில், ஓட்டுநர் உரிமங்களுக்கான தேசியப் பதிவை ஏற்படுத்துவது போலி உரிமங்களை குறைப்பதுடன் திறன்மிக்க ஓட்டுநர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும்.சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு அவசரநிலையில் உதவும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில், சட்ட விதிகள் திருத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த மசோதாவை வரவேற்கிறேன்.

 

தற்போதைய ஆட்டோமொபைல் உற்பத்தியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக மோட்டார் வாகனங்கள் இல்லாத நிலை உள்ளது. அதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் வாகன விபத்துகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக அரசை பாராட்டிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.


Leave a Reply