ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அறிவிப்பு

ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் ரயில்வே துறை தனியார் மயமாக்கல் நடவடிக்கையை கண்டித்து, கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனை அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா, இலாபகரமாக இயங்கும் இரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக தென்னக ரயில்வேயில் சென்னை – மதுரை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை – கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ரயில்கள் தனியாருக்கு கொடுத்தால் ரயில் டிக்கெட்களின் விலை உயரும் எனவும், 10 ரூபாய் பிளாட்பாரம் டிக்கெட் நூறு ரூபாயாக உயரும் எனவும் கூறிய அவர், இதனால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

தென்னக ரயில்வேயில் 30 ரயில் நிலையங்களை மத்திய அரசு தனியாருக்கு ஒப்படைக்க உள்ளதாகவும், ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply