சுவாதி கொலையை வைத்து எடுக்கப்பட்ட “நுங்கம்பாக்கம்” படம் 28 இல் ரிலீஸ்

டி.ரமேஷ் செல்வன், இப்போது ரவி தேவன் தயாரிப்பில் புது முகங்கள் மனோ, ஐரா நடிப்பில் ‘நுங்கம்பாக்கம்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வருகிற 28-ந்தேதி ரிலீசாகவிருக்கிறது . இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நுங்கம்பாக்கம் திரைப்படத்தைப் பார்த்தார்.

 

“இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிற ஒரு திரை படைப்பாகும்.இது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சுவாதி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த திரைப்படம், ‘சுவாதி கொலை வழக்கு’ என்கிற பெயரில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய சூழலில் நுங்கம்பாக்கம் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளிவர எல்லாவிதமான அனுமதிகளையும், உரிமத்தையும் பெற்றிருக்கிறது.

இந்த படம் தயாரிக்கத் தொடங்கிய போதே ராம் குமார் அவர்களின் தந்தை மற்றும் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் ஆகியோர் என்னிடத்தில் வந்து இது குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.இதுவரை கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு, வெளிவந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு இந்த படத்தின் கதையை பின்னியிருக்கிறார் என்றாலும் கூட, மாற்றுக் கருத்துக்களும் வலுவாக இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

 

அதிலும் குறிப்பாக ராம்குமார் இந்த கொலையை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று விடுதலை சிறுத்தைகளின் சார்பில் கருத்துக்களை வைத்தோம். இந்த வாதங்கள் அனைத்தும் இந்தத் திரைப்படத்தில் பதிவாகி இருக்கிறது. வெளியிலே பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற கருத்துக்கள், அல்லது ராம்குமாருக்கு ஆதரவாக பேசப்படுகிற கருத்துக்கள் அனைத்தும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த படம் நிறைவடைகிற போது ராம்குமார் கொலையாளி என்று நிரூபிக்க கூடிய வகையில் படத்தின் நிலை அமைகிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கருத்திலே நான் மாறுபடுகிறேன். சுவாதி கொலையின் பின்னணியில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக நான் எண்ணுகிறேன்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.


Leave a Reply