கோவையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உண்ணாவிரதம்.

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவையில் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வன வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக அரசு வனத்துறையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகும் வனவிலங்குகளை பட்டாசுகளை வெடித்து விரட்டுதல்,இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

 

இரவு,பகலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அரசு செய்து தருவதில்லை.அதனால் கோவை சிவானந்தா காலனியில் தமிழ்நாடு அரசு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களாக பணியாற்றுவர்கள் பணி மூப்பு அடிப்படையில் வனப்பணியாளர்களாக பதவி உயர்வு அளித்து வந்த நிலையில், இம்முறை இரத்து செய்யப்பட்டு நேரடியாக வனப்பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமென அரசு அறிவித்துள்ளது.

 

இதனால் வேட்டை தடுப்பு காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,நேரடியாக வனப்பணியாளர்கள் தேர்வு முறை இரத்து செய்யப்படுமெனவும் வேட்டைதடுப்பு காவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் 20 ஆண்டுகள் பணி புரிந்த வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனவும்,வேட்டை தடுப்பு காவலர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். சீருடையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.

 

இது குறித்து பேசிய வேட்டைத்தடுப்பு காவலர் ஒருவர் ” பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டதை நடத்தி வருகிறோம்.கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக ” தெரிவித்தார்.

 

பணிக்கு செல்லாமல் சீருடையுடன் வேட்டைத்தடுப்பு காவலர்கள் கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Leave a Reply