நண்பனை நம்பி அவனுடன் பைக்கில் ஏறி அலுவலகம் சென்ற இரண்டு இளம்பெண்களுக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த சிவா, பவானி மற்றும் நாகலட்சுமி ஆகிய 3 பேரும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர்களாக பணி புரிந்து வந்தனர்.
இன்று காலை பல்சர் இருசக்கர வாகனத்தில் வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு எழும்பூர் மார்க்கமாக மூன்று பேரும் ஒரே வண்டியில் சென்றுள்ளனர்.வாகனத்தை ஓட்டிச்சென்ற சிவா மட்டும் தலைகவசம் அணிந்து இருந்தார், உடன் சென்ற இரண்டு பெண்களும் ஹெல்மெட் அணியவில்லை.
அண்ணா சாலையில், தாம்பரத்தில் இருந்து பாரீஸ் செல்லும் மாநகரப் பேருந்தை ஓவர்டேக் செய்ய சிவா முயற்சி செய்திருக்கிறார். அப்போது பேருந்துக்கும் மற்றொரு இருசக்கர வாகனத்திற்கு இடையில் உள்ள இடைவெளியில் நுழைந்தபோது, சிவாவின் வாகனம் மற்றொரு வாகனத்தில் உரசியது.. இதில் நிலை தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தில், பேருந்து சக்கரம் கீழே விழுந்த மூவர் மீதும் ஏறி நசுக்கியதில், தலை கவசம் அணியாத இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவா பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணா சாலை அருகே நடந்த இந்த கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைக்கவசம் அணியாததாலும், வாகனத்தில் மூவர் அதி வேகத்தில் சென்றதாலும், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இது மிகப் பெரிய பாடத்தை வழங்கியுள்ளது.