தமிழ் மொழியிலும் தபால் துறை தேர்வு:ரவிசங்கர் பிரசாத்

தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி நாடுமுழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. அதனையடுத்து, ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

 

இந்நிலையில், தபால் தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இன்று அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவை நான்கு முறை முடங்கியது.

 

அதனையடுத்து, தமிழக எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். அப்போது, தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். அத்துடன், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்படுகின்றன என்று அவர் அறிவித்தார்.அதனையடுத்து, தமிழக எம்.பிக்கள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நன்றி தெரிவித்தனர்.


Leave a Reply