இறுதி சடங்கிற்கு பணத்தை தயார் செய்து வைத்துவிட்டு தந்தை-மகன்-மகள் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே சின்னகாளி பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் துரைராஜ் வயது 70. இவரது மனைவி ராசாத்தி இவர் 20 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டாராம். இத்தம்பதிக்கு செல்வி வயது 42, சாந்தி என 2 மகளும், கோபால கிருஷ்ணன் வயது 37 என ஒரு மகனும் இருந்தனர். கோபால கிருஷ்ணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.துரைராஜின் மகள் செல்விக்கு சிவக்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது.

 

அவருக்கு ரகுநாதன் என்ற மகன் இருந்தார். வயது22. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தனது மகனுடன் தந்தை வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ரகுநாதன் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.37 வயது ஆகியும் கோபால கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகாத நிலையில், துரைராஜ் பெரிதும் கவலையுடனேயே காணப் பட்டுள்ளார்.

இதனால் மன அழுத்தத்தில் தவித்த மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். கோபால கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள, தந்தையும் மகளும் வி‌ஷம் குடித்தனர். இதில் தந்தை துரைராஜ் உயிர் இழந்தார். மகள் செல்வி மயங்கிய நிலையில் கிடந்தார்.அக்கம் பக்கத்தினருக்கு இது குறித்த விவரம் தெரியவர, அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் செல்வியை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்நிலையில், இவர்களது தற்கொலை முடிவுக்கு முந்தைய நடவடிக்கை குறித்து அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் கூறியது அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், நேற்று காலை இடுவாயில் உள்ள தனது தங்கை சாந்தியைப் பார்க்கச் சென்ற கோபாலகிருஷ்ணன், தனது சொத்துப் பத்திரத்தைக் கொடுத்து, ரூ.30 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளார்.

பணம் எதற்கு என்று சாந்தி கேட்டபோது, இந்தப் பணம் கண்டிப்பாக நாளை தேவைப்படும் வைத்துக் கொள் என்று கூறியுள்ளார். சொத்துப் பத்திரம் எதற்கு என்று கேட்ட போது, எங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லை. அதனால் நீ வைத்துக் கொள் என்று கூறியுள்ளார்.இதனைக் குறிப்பிட்ட உறவினர்கள், ஏற்கெனவே தங்களது இறுதிச் சடங்குக்கு பணம் தேவைப்படும் என்று கருதி, அதை சகோதரியிடம் கொடுத்து வந்துள்ளார் என்று கூறி, சோகத்தில் ஆழ்ந்தனர். இது, பல்லடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Leave a Reply