டாஸ்மாக் என்றாலே விதிமீறல் என்று சொல்லும் அளவுக்கு, அதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கு, திருப்பூர் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? திருப்பூரில் உள்ள பல்வேறு டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களில் விதிமீறல்கள், அதிகவிலைக்கு விற்பனை போன்ற புகார்கள், நமது அலுவலகத்திற்கு வந்தவண்ணம் உள்ளன.
அந்த வகையில், காலேஜ் ரோடு- கொங்கணகிரியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் (எண்-1709) முறைகேடான பார், வஞ்சிப்பாளையம் ரோட்டில் மதுக்கடை (எண்-3983) – பாரில், 24 மணிநேரமும் திருட்டு தனமாக மது விற்பனை நடப்பதாக, பொதுமக்கள் புலம்புகின்றனர். டாஸ்மாக் கடைகளில் மதியம் 12மணிக்கு மேல்தான் மது விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் உத்தரவாகும்.
ஆனால், இவ்விருயிடங்களில் உள்ள டாஸ்மாக் கடையில், சூரியன் உதிப்பதற்கு முன்பே, ஜோராக மது விற்கின்றனர். கேஷுவலாக வரும் சில ‘குடி’மகன்கள், மதுபாட்டில்களை கமுக்கமாக வாங்கிச் செல்கின்றனர். அதிக விலை கொடுத்தாலும் காலை வேளையிலேயே கிடைக்கிறதே என்பது தான், அவர்களின் எண்ணமாக இருக்கிறது.
இந்த விதிமீறல் குறித்து அறிய களத்துக்கு சென்றோம். அப்போது மக்களின் மனக் குமுறல்கள் காட்சியாக நம்முன் தெரிந்தது. இதுகுறித்து விற்பனையாளரிடம், கேட்டதற்கு, “தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா டாஸ்மாக்கிலும் இப்படி சகஜமாக நடக்குது, எங்களை மட்டும் குற்றம் சொல்லாதீர்கள். மாச மாசம், மேலதிகாரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டுமென்றால், இதுபோன்ற விதிமீறல்களை கண்டுகொள்ளக் கூடாது,” என்று, தங்களின் செயலை, நியாயப்படுத்துகின்றனர்.
காலையிலேயே மதுவிற்பனை நடப்பது, பனியன் தொழில் நிறைந்த திருப்பூரில், தொழிலாளர்களின் வேலைத்திறனை பாதிக்கிறது. பணி இடத்தில் வேலை மந்தம், சக பணியாளர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல், குடும்பத்தில் தகராறு செய்தல் மற்றும் சாலை விபத்துக்கு வழி வகுக்கிறது.
இங்கு இரவு 10 மணிக்கு மேல் மதுவிற்பனை நடப்பதால் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்கள் அரங்கேறும் கூடாராமாக மாறியுள்ளது.
மது விற்பனை ஜோராக நடக்கும் கொங்கணகிரி பகுதியில், புகழ்பெற்ற கந்தப்பெருமான் கோவில் உள்ளது. எட்டிபார்க்கும் தூரத்தில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. குடிமகன்கள் தொல்லையால், பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியர், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான மன உலச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் மதுபோதையில் தகராரில் ஈடுபடுவது, ஆடைகள் களைந்தபடி ரோட்டில் விழுந்து கிடப்பது போன்றவை அரங்கேறுவதால் ,போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மதுவால் பல குடும்பங்களில் குடும்பத் தலைவர்களை இழந்து, பெண்கள் விடும் கண்ணீர் பண பெருச்சாலிகளுக்கு தெரியப்போவதில்லை?.ஆனால் அவர்களின் சாபம் சும்மா விடாது.
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், திருப்பூர் மாவட்ட முழுவதும் நடக்கும் டாஸ்மாக் விதிமீறல்களுக்கு நம் குறிப்பிட்டுள்ள இரு மதுகடையே சான்று ஆகும்.