பொதுவாக போக்குவரத்து காவல் துறையினர் சிக்னல் அருகில் நின்று விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பர்.அப்படித்தான் இன்றும் கோவை சாய்பாபா காலனி பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் இன்று போக்குவரத்து காவல் துறையினர் வழக்கம்போல் தங்களது பணியினை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போக்குவரத்து போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இருவரும் மது அருந்தியிருப்பதை கண்டறிந்த போலீசார் அபராதம் விதிப்பதற்காக அவர்களது பெயரை கேட்டுள்ளனர்.
அவ்வளவு தான்..அத்தனை நேரம் அமைதியாக இருந்த மதுப்பிரியர்கள் பொங்கியெழுந்து விட்டனர்.கோபத்தில் போக்குவரத்து நிறைந்த சாய்பாபா காலனி சிக்னலில் நடுரோட்டில் படுத்து ஆபத்தை உணராமல் மதுவின் மயக்கத்தில் போராட்டம் செய்ய துவங்கினர்.வாகன ஓட்டிகளும் மதுப்பிரியர்கள் நடு ரோட்டில் படுத்து கிடப்பதை கண்டு ஒதுங்கி சென்றுள்ளனர்.பின்னர்,சாலையில் இருந்து எழுந்து வந்த இருவரில் ஒருவர் வீடியோ எடுப்பது தெரிந்தும் ” நாளைக்கு பேப்பர்ல வரணும்.ஐயா..சாமி..இவங்க போக்குவரத்து விதிமுறைகள மதிக்கிறாங்கன்னா..எல்லோரையும் செக் பண்ணனும்…அவசரத்துல போறவங்களையெல்லாம் செக் பண்ணுறாங்க ” ன்னு உண்மையை உளறிக்கொட்டினார்.அவர்களை சமாதானம் செய்ய வந்த காவலரையும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தடுத்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இப்போராட்டம் தொடர்ந்தது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.காவலர்களிடம் மதுப்பிரியர்கள் சிக்கி கொண்டனரா ? இல்லை மதுப்பிரியர்களிடம் காவலர்களிடம் சிக்கி கொண்டனரா ? என்பது பொதுமக்கள் நொந்து கொண்டதே உண்மை.அவசர காரியங்களுக்காக செல்வோர்,அலுவலகத்திற்கு வீட்டிலிருந்து ஏதோ ஒரு காரணத்தினால் தாமதமாக செல்வோர் அவசரமாக சென்று கொண்டு இருக்கும் பொழுது சிக்னலில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்தினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கோவையில் காலை மற்றும் மாலையில் போக்குவரத்து போலீசார் சாய்பாபா காலனி,அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரி,ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள சிக்னலின் அருகே இது போன்ற வாகன சோதனையில் ஈடுபடுவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இதனை கருத்தில் கொண்டாவது காவல் துறையினர் இது போன்று சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபடாமல் கொஞ்ச தூரத்தில் நின்றாவது சோதனை மேற்கொண்டால் விபத்துக்களை மேலும் குறைக்க இயலும்.கண்டு கொள்ளுமா காவல் துறை ?