தடம் புரண்ட கோவை – மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில்

கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலின் என்ஜின் மயிலாடுதுறை அருகே தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கு ஈரோடு, திருச்சி. தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக ஜனசதாப்தி ரயில் வாரத்தில் செவ்வாய் கிழமை நீங்கலாக எஞ்சிய ஆறு நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 1500 பயணிகளுடன் பயணிக்கும் இந்த ரயில் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ஒரு வளைவில் திரும்பும் போது ரயில் எஞ்சினின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகின.

 

அப்போது ரயிலின் ஓட்டுனர்கள் அஜய்குமார் மற்றும் பாண்டிய ராஜ் ஆகியோர் அபாயத்தை உணர்ந்து திறம்பட செயல்பட்டு ரயிலை நிறுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டு ரயில் பயணிகள் அனைவரும் எந்த காயமும் இல்லாமல் தப்பினர். பயணிகள் அனைவரும் நடந்தே மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தை அடைந்தனர். இந்த விபத்தில் தண்டவாளத்தில் 10க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் கட்டைகள் சேதம் அடைந்துஉள்ளன.

 

திருச்சி – சென்னை வழித்தடத்தில் சேதம் ஏற்பட்டதால் இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மயிலாடுதுறை கோவை ஜனசதாப்தி விரைவு ரயில் குற்றாலத்திலிருந்து இயக்கப்பட்டது. மயிலாடுதுறையில் இருந்து முன் பதிவு செய்து இருந்த பயணிகள் குற்றாலம் சென்று சேர ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.


Leave a Reply