பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சட்ட பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துறைமுருகன் சாலைகளில் தடுப்பு அமைக்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.

 

அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த இடத்தில் பணிகள் சரியாக செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டினால் அதை ஆய்வு செய்து தவறு இருக்கும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளின் தரத்தை ஆய்வு செய்ய தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அவ்வாறு அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது தவறு இருக்கும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

பின்னர் பேசிய துறைமுருகன் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறும் இடங்களில் சாலைகள் முழுமையாக போடப்படவில்லை என குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஒரு திட்டம் போடும் போதே சாலைகளை சீரமைப்பதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்து திட்டம் துவங்க வேண்டும் என்றார். ஆனால் திமுக அதுபோல் செய்யாமல் பாதியில் விட்டுவிட்டதாகவும், அவ்வாறு விடப்பட்ட இடங்களில் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் சாலை அமைக்கப்பட்டதாகவும் பதில் அளித்தார்.


Leave a Reply